×

முதல் குட்டு

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது செல்லாது, அது சட்டவிரோதம் என்று கூறி ஒன்றிய அரசின் தலையில் முதல் குட்டு வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். அரசியல் எதிரிகளை பழிவாங்க ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த இந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் எடுத்த நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு பெரிய சறுக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்க கேட்டு ஒன்றிய அரசு மன்றாடியும் உச்ச நீதிமன்றம் அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த மாதம் இறுதியோடு எஸ்.கே. மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் இருந்து விலகி விட வேண்டும் என்று கெடு விதித்து உத்தரவிட்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

யார் இந்த எஸ்.கே. மிஸ்ரா?. அவருக்காக ஏன் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் இத்தனை மெனக்கெட வேண்டும் என்றால் அத்தனையும் அதிர்ச்சி தகவல்கள். 1984ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் தான் இந்த சஞ்சய் குமார் மிஸ்ரா என்கிற எஸ்.கே. மிஸ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தரபிரதேசம். வருமானவரித்துறை வசம் உள்ள மிகப்பெரிய வழக்குகளை விசாரித்தவர். பல்வேறு தகவல்கள் இவரது விரல் நுனியில் அத்துப்பிடி. இவரை பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஒன்றிய அரசு 2018 நவம்பர் 19ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனராக கொண்டு வந்தது. அப்போது அவர் டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தலைமை கமிஷனர் பதவியில் இருந்தார். எஸ்.கே. மிஸ்ராவுக்கு அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் 2020 நவம்பர் 13ல் மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

2021 நவம்பர் 17ல் மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதோடு இனிமேல் சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்கள் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்பதற்கு பதில் 5 ஆண்டுகள் என்று மாற்றி அமைத்து அரசாணை பிறப்பித்தது ஒன்றிய அரசு. இத்தனை முக்கியத்துவத்தை எஸ்.கே. மிஸ்ராவுக்கு ஒன்றிய அரசு கொடுக்க காரணம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் அடிப்படையில் அவர் முதல்முதலில் கைவைத்தது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரைத்தான். குறிப்பாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை விசாரணைக்காக வரவழைத்து இழுத்தடித்து, கைது வரை பதற்ற நிலைக்கு கொண்டு சென்றது அமலாக்கத்துறை.

அத்தோடு விடவில்லை அமலாக்கத்துறையின் ஆட்டம். கர்நாடக காங்கிரஸ் தலைவரும், தற்போதைய துணை முதல்வருமான டிகே சிவக்குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், முன்னாள் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது, தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முன்னாள் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியின் மருமகன் பூபீந்தர் சிங் ஹனி, மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா சட்டர்ஜி, டெல்லி துணைமுதல்வராக இருந்த சிசோடியா,

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர்ஜெயின், கடைசியாக தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரித்து, இவர்களில் பெரும்பாலானோரை கைது செய்து நடவடிக்கை எடுத்தது. இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். ‘அமலாக்கத்துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக வாழ முடியாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வக்கீல் ஹரிஷ்சால்வே முறையிட்டதற்கான காரணம்.

The post முதல் குட்டு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Director of Enforcement ,SK Mishra ,Guttu ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...